கல்லூரிக் காலம்!
கீழுள்ளது, GCT கல்லூரி (விடுதியில்) வாழ்க்கையின் முடிவில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்!
முதலாண்டு (சின்னப் பசங்க!)
என்ன ஒரு மாற்றம், பள்ளியிலிருந்து கல்லூரிக்கு,
அவசியமாய் இருந்தது மிக்க மன உறுதி!
சீனியர்கள் தந்தனர் பல துர் சொப்பனங்கள்
எதிர்பார்க்காத தருணங்களில் அவர்களின் தாக்குதல்கள்!
இரவுக் காட்சிகள் பல சென்றனர்,
சீனியருக்கு உகந்த எங்களில் சிலர்!
தனிமை வெறுத்து கூட்டமாய் உழன்றோம்!
உடன் படித்த மாணவிகளால் சற்று ஆறுதல்!
மாதத்தின் முதல் வாரம், கையில் காசிருந்த நேரம்
அன்னபூர்ணா உணவகம் கடவுள் தந்த வரம்
ஆண்டின் முடிவில், வீரர்கள்(!) ஆனோம்!
இரண்டாமாண்டு (எதற்கும் தயார்!)
எங்களில் சி(ப)லர் ராகிங்குக்கு தயாராயினர்!
இன்னும் சிலர் வெண்குழல் ஊதத் தொடங்கினர்!
மேதாவிகள் எலெக்ட்ரானிக்ஸ் கிளையைத் தேர்ந்தெடுத்தனர்!
கனவு இல்லம் கட்ட நினைத்தோர் சிவில் பக்கம் தாவினர்!
தேன்(பெண்)குரல் அதிகம் கேட்க விழைந்தோரின் தேர்வு EEE!
பெரும்பான்மையினரின் தேர்வு மெக்கானிகல் படிப்பு தான்!
வேறெதுவும் கிடைக்காதோர் சென்றது ப்ரொடக்ஷன் என்ஜினியரிங்!
ஊர் மேய்தலும் 'கடலை' போடுதலும் தலையாய கடமைகள் ஆயின!
கல்லூரித் திரையரங்கம் தந்தது சனி இரவுக் காய்ச்சல்கள்!
ஞாயிறு விடியல்கள் மது மயக்கத்தில் கரைந்தன, சிலருக்கு!
எங்களை தேர்வில் காப்பாற்றியது கடைசி நிமிடம் போட்ட 'கடம்'!
மூன்றாமாண்டு (நம்பிக்கையுடன் நடை!)
பலவித ஆட்டங்களிலும் திறமை சேர்த்துக் கொண்டோம்!
வகுப்பறைகளுக்கு சென்றது 'உள்ளேன் ஐயா'வுக்கு மட்டுமே!
ஓய்வு நேரங்கள் தேநீர் பந்தய சீட்டாட்டத்தில் கழிந்தன!
எதிலும் ஒரு அலட்சியம், கொஞ்சம் திமிர், கொஞ்சம் நக்கல்!
நாங்கள் மிக வெறுத்த மூன்று விஷயங்கள்
--- விடுதி உணவு, விடுதிக் கழிவறைகள், வகுப்பறைகள்!
பல கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு கலக்கினோம்!
மரத்தடிகள் இதயங்களின் இட மாற்றலை அரவணைத்தன !!!
பல கல்லூரி அடைப்புகளுக்கான காரணம் தந்தது இலங்கைப் பிரச்சினை!
அது மிக நிச்சயமாக எங்கள் வாழ்வின் 'பொற்காலம்'
நான்காமாண்டு (பிரிவின் தாக்கம்!)
பிரிவு என்ற எண்ணமே எங்களை மேலும் நெருங்க வைத்தது!
கொஞ்சம் சோர்வு, கொஞ்சம் கவலை, கொஞ்சம் சோகம்!
ப்ராஜெக்ட் செய்வதை விட ப்ராஜெக்ட் புத்தகம் வெளியிடுவதில் ஆர்வம்!
சேர்ந்திருக்கும் நாட்களை எண்ணத் தொடங்கினோம்!
பிரிவு தரும் வேதனைக்கு தயாரானோம்!
எங்களில் பலரும் உணர்வு வயப்படுதலை உணர்ந்தோம்!
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தோம்,
கொஞ்சம் பயமும், நிச்சயமற்ற தன்மையும் மனதை அழுத்தியது!
இருந்தும், கல்லூரியில் நிரூபித்த எங்களின் ஆற்றலை, தகுதியை
இன்னொரு முறை வெளி உலகுக்கும் காட்ட வேண்டும் !
முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்தே இருந்தது!
என்றென்றும் அன்புடன்
பாலா
1 மறுமொழிகள்:
பாலா,
இன்னும் சிக்கனமாக எழுதியிருக்கலாம் ;-)
தேசிகன்
Post a Comment